பழனி
நாளை பழநி மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழா, கடந்த 4ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவ.9) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு 11 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
நாளைப் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறும். பிறகு பிற்பகல் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்று அதன்பிறகு கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மலைக்கோயிலில் இருந்து சின்னக்குமாரர் கிரிவீதி வந்தடைவார். மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைவார். பிறகு மாலை 6 மணிக்கு மேல் கிரி வீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்று இரவு 9 மணிக்குக் கோயில் சார்பில் வெற்றி விழா நடைபெறும்.
அதைத்தொடர்ந்து சம்ரோட்சணம் செய்யப்பட்டு, ராக்கால பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று பகல் 12.30 மணி வரை மலைக்கோயிலுக்குப் பக்தர்கள் அனுமதி இல்லை. யூ டியூப் மூலம் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கோயில் உற்சவ நிகழ்ச்சிகளில் தொடர்புடைய அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இங்கு இன்று முருகன் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், நாளை (நவ.9) சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.
நாளை காலை 5.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். சூரசம்ஹாரம் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை கோயிலுக்கு உள்ளே உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனால் மாலை 4 முதல் 7 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் இரவு 7 மணிக்குப் பின் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.