சென்னை: பொது ஊரடங்கு நாளான, நாளை (ஞாயிற்றுக்கிழமை)  சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கு நாளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வு எழுதச்செல்பவர்களின் நலனை முன்னிட்டு ரயில் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டமேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னை புறநகர் ரயில் சேவைகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்றும்,  அதன்படி சென்னை – அரக்கோணம், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை – வேளச்சேரி, சென்னை – செங்கல்பட்டு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்  என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்து உள்ளது.