டில்லி:

நாளை மாலை முழு கிரகணத்துடன் நிலா புளூ மூன், பிளட் மூன், சூப்பர் மூன் என 3 வடிவங்களில் காட்சியளிக்கவுள்ளது.

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது ஏற்படும் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. நாளை இந்த மாதத்தில் வரும் 2-வது பவுர்ணமி நாளாகும். அப்போது நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும். அதனால் அது புளு மூன் என்று அழைக்கப்படுகிறது.

நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணமும் தோன்றுகிறது. கீழ்வானத்தில் நிலா மாலை 6.25 மணியளவில் தெரியும் போதே முழு சந்திர கிரகணமும் தொடங்கி இரவு 7.25 மணிவரை நீடிக்கிறது. பின்னர் பூமியின் நிழல் மெல்ல மெல்ல மறைந்து நிலா இயல்பு நிலைக்கு திரும்பும்.

இந்த சந்திர கிரகணத் சமயத்தில் சூரியனின் ஒளி நிலா மீது நேரடியாக விழாது. இதற்கு பதிலாக வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி நிலா மேல் விழும். இதனால் நிலா சிவந்து காணப்படும். இது ‘‘பிளட் மூன்’’ ஆகும். இது 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுக்கு பின் இந்த அரிய நிகழ்வு ஏற்படவுள்ளது.

பூமியை நிலா சுற்றி வருகையில் மாதத்துக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது நிலா வழக்கத்தைவிட 10% பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும். இது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வும் முழு சந்திர கிரகணத்தின் போதே நடக்கவுள்ளது.

அப்போது கடல், ஆறுகளில் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்றும், அச்சப்படும் அளவுக்கு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்களாலும், தொலைநோக்கி மூலமும் பார்க்க முடியும்.