பித்ருக்களின் ஆசியை பெறும் மகாளய அமாவாசை உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் நாளை அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களின் ஆசியை பெறும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மகளாய பட்சத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன. அன்றைய தினம், முன்னோர் களை பூஜிப்பது நல்லது.
பொதுவாக, மாதம் ஒருமறை அமாவாசை வருவது வழக்கம். இருந்தாலும், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் தர்ப்பணம் செய்ய மற்றும் திதி கொடுக்க மிகவும் உகந்த நாட்களாகும். இந்த மூன்றிலும் மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்தது.
மகாளயம் என்பது ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசைக்கு முதல் நாள் வரை வரும் இரு வார காலம் ஆகும். அந்த நாட்களில் முன்னோர் மறைந்த திதி அன்று தர்ப்பணம், திதி கொடுத்தல் ஆகியவை செய்வது மிகவும் நல்லது. இந்த மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூவுலகில் சஞ்சரிப்பதாக ஐதீகம் உள்ளது. அதனால் அந்த நாட்களில் திதி கொடுப்பது அவசியம்.
பொதுவாக மறைந்த பெரியோர்களுக்கு அவர்கள் இறந்த தினத்தில் திதி கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து திதி கொடுக்கலாம். அன்றைய தினம் ஏதேனும் புனித நதியில் நீராடி முன்னோர் கடமையை முடிப்பது நல்லது.
மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய உகந்த புண்ணிய தலங்கள் கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், பம்பை நதிக்கரை மற்றும் பல இடங்கள். முடியாத வர்கள் உள்ளூரில் உள்ள இடங்களிலும் மூத்தோர் கடமைகளை முடிக்கலாம்.
மகளாய அமாவாசைக்கு முன்னதாக மகளாய பட்சம் ஆரம்பமாகிறது. அதாவது புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் பெளர்ணமி முடிந்த மறுநாள் அல்லது ஆவணி மாத இறுதியில் வரும் பெளர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா, அதுவரை – அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகளாய பட்சம் ஆகும்.
மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்கில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. இதுமட்டுமல்லாது, தீராத நோய்களுக்கு மருத்துவம் செய்துக் கொள்ள தொடங்குவதற்கும் மகாளய அமாவாசை சரியான நாளாகும். மகாளயபட்ச நாளில் வரும் மத்யாஷ்டமி தினத்தன்று செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மங்கள் மற்ற புண்ணிய நாட்களில் கிடைக்கும் பலனை விட கூடுதலாக 20 மடங்கு பலன் தர நல்லது. மேலும், மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களைத்தர வல்லது என புராணங்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீமந்நாராயணனே இராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டுக் கூடத் திதி பூஜையைச் செய்யலாம். பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
பித்ரு ஸ்தலங்கள்
இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, இராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகியவை. இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமாகும்.