திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்பட்ட உள்ள நிலையில், அங்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. பொதுவாக கார்த்திகை தீபம் பவுர்ணமியை ஒட்டியே வரும். அதனால், லட்சக்கணக்கான பக்தர்கள், மகாதீபத்தை தரிசித்தவாறே கிரிவலம் செல்வர்.
இந்த நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழன்) காலை 7.58 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.