சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், கணபதி பூஜை நேரம், மற்றும்  வழிபடும் முறைகள் விவரம் வெளியாகி உள்ளது.

ஆவணிமாதம் சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்தார். விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் ஜென்மதினமாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் வழிபாடு என்பது இந்துக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தின் வழிபாடாக உள்ளது. 
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி வரும் நடப்பாண்டு நாளை (செப்டம்பர் 7ம் தேதி) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும், விற்பனைகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அரசின் கெடுபிடி காரணமாக உயரம் குறைந்த சிலைகளே விற்பனையாகி உள்ளது.  அதிகபட்சமாக 10 அடி உயரம் வரையிலான சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு அறிவித்துள்ள நிலையில், அதை பிடைபிடித்தே பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில், ஒன்றரை லட்சம் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், இன்று மாலை அல்லது இரவே வீட்டை  நன்றாக சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.

நாளை காலை (விநாயகர் சதுர்த்தி) கடைகளில் விற்பனை செய்யப்படும்  களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி அதை  பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும். களிமண் விநாயகர் சிலைகள் வாங்கும்போது பலகையில் பச்சரிசி மாவு கோலம் இட்டு வாங்கவும். வெறும் பலகையில் வாங்குவதை தவிர்க்கவும். அருகம்புல், எருக்கம் பூ மாலை சூடி, வில்வ இலைகள், பழங்கள் மற்றும் விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை ஆகியவை வைத்து பூஜைகள் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்

அதைத்தொடர்ந்து அந்த விநாயகர் சிலைக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அதாவது நாளை ராகுகாலத்தை தவிர்த்து மதியம் 1மணிக்குள் பூஜைகளை நடத்தி முடிக்க வேண்டும்.  அதாவத,  விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு, பழங்கள்  குறிப்பாக விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம்  போன்றவற்றை படையல் வைக்க வேண்டும். இவை அனைத்தும் வைக்க இயலாதவர்கள் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்தாலே போதும். ( காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது) அத்துடன் அத்துடன்  விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறப்பானது ஆகும். இவற்றைக்கொண்டு பூஜைகள் செய்து வணங்க  வேண்டும்.

பின்னர், அந்த களிமண் விநாயகர் சிலைகளை,  கரைப்பதற்கு என்று குறிப்பிட்ட நாளில் அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நீர்நிலைகளில்  கரைக்க வேண்டும். அல்லது கடலில் சென்று கரைக்கலாம். அவ்வாறு வெளியே செல்ல முடியாதவர்கள், பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுடன் சேர்த்து வைத்து விடலாம். பெரிய சிலைகளை கரைக்கும்போது, வீடுகளில் வணங்கப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளையும் நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.

விநாயகர் சதுர்தியை முன்னிட்டு, விநாயகர் பாடல்கள், விநாயகர் அகவல் படிக்கலாம் விநாயகர் காயத்ரி மந்திரம், விநாயகர் ஸ்லோகம் போன்றவற்றை உச்சரிக்கலாம்.  மேலும், கீழே உள்ள 108 விநாயகர் போற்றி பாடலை பாடி, விநாயகர் அருளை பெறலாம்.

ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தானே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
ஓம் ஆதிமூலமானவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவினனே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைபவனே போற்றி
ஓம் ஈசன் தலைமகனே போற்றி
ஓம் ஈகை நெஞ்சினனே போற்றி
ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி
ஓம் உலகத்தின் தலைவனே போற்றி
ஓம் ஊர்தோறும் உறைபவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் எளியோர்க்எளியவனே போற்றி
ஓம் என்னுயிர்த் தந்தையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் எருக்கம்பூ சூடுபவனே போற்றி
ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐங்கரம் படைத்தானே போற்றி
ஓம் ஐந்தெழுத்தான் மகனே போற்றி
ஓம் ஒப்பில்லாத ஒருவனே போற்றி
ஓம் ஒளிமயமானவனே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஔவைக்அருளினாய் போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கண நாதனே போற்றி
ஓம் கணேச மூர்த்தியே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கற்பக விநாயகனே போற்றி
ஓம் கந்தனுக்அண்ணனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் கிருபா சமுத்திரமே போற்றி
ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணத்தில் குன்றே போற்றி
ஓம் குற்றம் பொறுத்தாய் போற்றி
ஓம் கூத்தன் பிள்ளாய் போற்றி
ஓம் கொழுக்கட்டை ஏற்பாய் போற்றி
ஓம் கோவிந்தன் மருகனே போற்றி
ஓம் சடுதியில் அருள்வாய் போற்றி
ஓம் சங்கஷ்ட ஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணினாய் போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சுருதியின் கருத்தே போற்றி
ஓம் சுந்தர வடிவினனே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தம் ஏந்தியவனே போற்றி
ஓம் தும்பிக்கை முகனே போற்றி
ஓம் துயர் தீர்ப்பவனே போற்றி
ஓம் தெய்வக் குழந்தாய் போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொப்பையப்பனே போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நம்பினாரைக் காப்பாய் போற்றி
ஓம் நான்மறை காவலனே போற்றி
ஓம் நீதிநெறி மிக்கவனே போற்றி
ஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றி
ஓம் பழத்தை வென்றாய் போற்றி
ஓம் பக்தரைக் காப்பாய் போற்றி
ஓம் பரிபூரணமானாய் போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் பிரணவப் பொருளாய் போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிள்ளை மனத்தானே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் பெரிய கடவுளே போற்றி
ஓம் பேரருள் மிக்கவனே போற்றி
ஓம் பேதம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் மஞ்சளில் வாழ்பவனே போற்றி
ஓம் மகிமை நிறைந்தவனே போற்றி
ஓம் மகா கணபதியே போற்றி
ஓம் முதல்பூஜை ஏற்பவனே போற்றி
ஓம் முழுமுதல் கடவுளே போற்றி
ஓம் முக்கண்ணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் மெய்யான தெய்வமே போற்றி
ஓம் மேன்மை மிக்கவனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரசித்தி விநாயகனே போற்றி
ஓம் வாழ்வு தரும் வள்ளலே போற்றி
ஓம் வானவர் தலைவனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் விக்ன விநாயகனே போற்றி
ஓம் வியாசருக்உதவினாய் போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பாய் போற்றி
ஓம் வீதியில் உறைவாய் போற்றி
ஓம் வெள்ளை மனத்தாய் போற்றி
ஓம் வெற்றி அளிப்பாய் போற்றி
ஓம் வேழ முகத்தவனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி!

 

[youtube-feed feed=1]