சென்னை: திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை  நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு நந்தனம் ஒய்எம்சிஏ மைனதானம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.  இந்த விழாவில் சுமார் 75 ஆயிரம்  அமரும் வகையில், இருக்கைகள், 50 அடி உயரத்தில் திமுக கொடிகள் என  பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.

பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுகவின் தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவை பவள ஆண்டு விழாவாக  நாளை (செப்டம்பர் 17ஆம் தேதி)  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுகவின் முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, 1985ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கௌரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர். அதில் ,

பெரியார் விருது – பாப்பம்மாள்,

அண்ணா விருது – அறந்தாங்கி நிஷா ராமநாதன்,

கலைஞர் விருது – எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி,

பாவேந்தர் விருது – கவிஞர் தமிழ்தாசன்,

பேராசிரியர் விருது – வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட

‘மு.க.ஸ்டாலின் விருதை’ தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு பவள விழா ஆண்டு என்பதால், முப்பெரும் விழா ஆண்டு மற்றும்  75 ஆண்டு வள விழா ஆண்டை  குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கு அமைக்கப்படுகிறது. விழா அரங்கைச் சுற்றிலும் 50 அடி உயரத்தில் திமுக கொடிகள் பறக்க, விழா மேடைக்கு வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வண்ணமய விளக்குகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மேலும் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கும் , நிர்வாகிகளுக்கும் தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த ஏற்பாடுகளை அமைச்சர்கள் சென்று நேரில் பார்வையிட்டனர்.  முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மேடை, விழாப் பந்தல் உள்ளிட்டவற்றை பார்வையிடுவது பொதுப்பணித்துறை அமைச்சர் முறை என்ற அடிப்படையில் எனது கடமை என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். இந்த ஏற்பாடுகளை இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்வையிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.