சென்னை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை திருவாரூர் செல்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு பணியை மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

அந்தவகையில் அவர், திருவாரூர் மாவட்டத்தில் நாளை (புதன்) மற்றும் நாளை மறுதினம் (வியாழன்) ஆகிய 2 நாட்கள் கள ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளார்.

அவர் நாளை காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார். அங்கு கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க உள்ளார். அதன்பின்னர் அவர், மாலையில் காட்டூர் சென்று அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். அவர் ‘ரோடு ஷோ’ மூலம் சாலையில் நடந்து சென்று தி.மு.க.வினர், பொதுமக்களின் வரவேற்பை ஏற்கிறார்.

அன்றைய தினம் இரவு திருவாரூரில் தங்குகிறார். 10-ந்தேதி அன்று காலை திருவாரூர் பஸ் நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழா முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து சாலைமார்க்கமாக திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.