சென்னை

நாளை கல்லணையை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.

வங்கிகளின் நிதி உதவியுடன் கல்லணையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் அணையின் கால்வாயில் கடைமடை வரை நீர் சென்று சேர வசதியாக உள்கட்டமைப்புக்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.   மேலும் தண்ணீர் செல்லும் அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றை ஆய்வு செய்ய முதல்வர் மு க ஸ்டாலின் நாளை அதாவது ஜூன் 11 ஆம் தேதி காலை சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறார்.  அங்கிருந்து கல்லணை கால்வாய் சென்று ஆய்வு நடத்திய பிறகு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.  அத்துடன் கால்வாய்களைத் தூர் வார ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதையும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் திருவாரூர் செல்ல உள்ளார்.  வரும் 12 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல்வர் மேட்டூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.  அங்கு அவர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.