சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை தமிழகத்தின் 6 மாவடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக். 17) அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்தது. மேலும், வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 17) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மினனலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (அக்.18) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அக்.20ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.”

என்று தெரிவித்துள்ளது.