சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தினால், நாளை (ஞாயிறு) தடுப்பூசி முகாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
“தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால், நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதார பணியாளர்களும் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்த உதவுவதாக கூறியதால், நாளை நான்காவது தடுப்பூசி முகாமை நடத்த தயாராகி வருகிறோம்.
மாநிலம் மழுவதும் 20 ஆயிரம் இடங்களில் நடக்கும் சிறப்பு மெகா முகாம்களில், காலை 7:00 முதல் மாலை 7:00 மணி வரை தடுப்பூசி போடப்படும். கடந்த மாதம் (செப்டம்பரில்)தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 1.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுபோல, அக்டோபரிலும், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,’
மத்தியஅரசு தமிழ்நாடு அரசுக்கு 1.23 கோடி தடுப்பூசிகள் தருவதாக தெரிவித்துள்ளது. கூடுதலாக தடுப்பூசி பெற்று, 1.50 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 – 2538 4520, 044 – 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.