சென்னை: நாளை (19ந்தேதி) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. 92 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை எழுத 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை,நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. அதனப்டி, நடப்பு ஆண்டில் துணை ஆட்சியர் (18), காவல் துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் (13), வணிகவரி உதவி ஆணையர் (25), ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் (7),மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (3) என குரூப்-1 பதவியில்காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. அதன்படி தேர்வு, அக்டோபர் 30-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றப்படுவதாக,டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி அறிவித்தார்.
அதன்படி, குரூப்-1 பணிக்கான முதல்நிலைத்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர்19-ம் தேதி நடத்தப்பட உள்ளது.கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தளங்களில் அறியலாம்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு இருக்கிறது. தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.