சென்னை

கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தினசரி சமையலில் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை தாறுமாறாக எகிறி உள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயில் கடுமையாக இருந்ததால் தமிழகத்தில்  தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் அங்கும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து வெகுவாக குறைந்துள்ளதும் தக்காளி விலை உச்சம் தொடுவதற்குக் காரணம் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

வரும் நாட்களிலும் தக்காளி விலை வரும் நாட்களிலும் ஏறுமுகத்தில் இருக்கும் என்பதால் தக்காளியைப் பதுக்கி விற்றால் கூடுதல் லாபம் பார்க்கலாம் என்று ஒரு சில வியாபாரிகள் எண்ணி டன் கணக்கில் தக்காளி பதுக்கப்பட்டு வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்யப்படும் என்றும் தக்காளியைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்தார்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நேற்றைய நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விலை ரூ.60-க்கு விற்கப்படும் எனக் கூறிய நிலையில் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.