நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
மேலோட்டமாக படித்தால் விளங்காது….
செங்கல்பட்டு பரணூர் டோல் ‘கொள்ளை’ பற்றி இப்போது பரவலாக பேச்சு அடிபடுகிறது. அந்த டோல் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கட்டுரை எழுதினோம். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த டோல், அடித்து நொறுக்கப்பட்ட போதும் பெரிய பதிவை போட்டோம். இப்போது அந்த பதிவின் முக்கிய பகுதியை இங்கே தருகிறோம்..
.”…சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையின் தலைமைப்பீடமாகவே மாறிவிட்டுள்ளன என்பதே மறுக்கமுடியாது உண்மை.
செங்கல்பட்டு பரணூரை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தின் மிக முக்கியமான சுங்கச்சாவடி..
தென்மாவட்ட, கொங்கு மண்டல, வடக்கு மண்டல வாகனங்கள் சென்னை நோக்கி எப்படி வருகின்றன என்பதை முதலில் பார்ப்போம்
கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை தென்காசி மார்க்க வாகனங்கள் அனைத்தும் மதுரைக்கு வந்து சேர்ந்து பயணிக்கும்.
திருச்சியை அடையும்போது, அவற்றுடன், ராமேஸ்வரம், காரைக்குடி புதுக்கோட்டை திண்டுக்கல் தேனி கம்பம் மார்க்க வாகனங்கள் சேர்ந்துகொள்ளும்..
திருச்சியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பயணத்தின்போது உளுந்துபேட்டையில் இவற்றுடன் சேலம் கோவை மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கலக்கும்.
விக்கிரவாண்டி வந்தால், கும்பகோணம் தஞ்சை பட்டுக்கோட்டை மன்னார்குடி மார்க்க வாகனங்கள் சென்னை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் கலக்கும்.
திண்டிவனம் வந்தால், புதுவை கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மார்க்க வாகனங்கள் கலக்கும்.
தென்மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், மத்திய மாவட்ட வாகனங்கள் என அனைத்தையும் முதலில் உள்வாங்கும் சுங்கச்சாவடி மேல்மருவத்தூர் அருகே ஆத்தூரில் உள்ளது.
இந்த சுங்கச்சாவடியை விட இன்னும் கூடுதலாக, சென்னையிலிருந்தும் சென்னையை நோக்கியும் என இருபக்கமும் வாகனங்களை அதிகமாக உள்வாங்குவது செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடிதான்.
இப்போது நினைத்துப்பாருங்கள் இந்த இரண்டு சாவடிகளிலும் எவ்வளவு தொகை தினமும் சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகும் என்று.. இனி கொஞ்சம் நிதானமாக படியுங்கள்…
முதலில் பெட்ரோல் டீசல் வகை கொள்ளையை பார்ப்போம்.
பரணூர் டோல் சாலை நீளம் 46 கிலோமீட்டர். இதனை ஒரு காரில் கடக்க மூன்று அல்லது நான்கு லிட்டர் பெட்ரோல் தேவை. ஏற்கனவே கார் வாங்கும்போதே சாலைவரி என பெருந்தொகையை வசூலித்துவிடுகிறார்கள்
அதே கார், டோல்சாலையை கடக்க 46 கிலோ மீட்டருக்கு பெட்ரோல் டீசல் விலையில், மத்திய மாநில அரசுகளுக்கு 180 ரூபாய்வரை வரிகளாக செலுத்திவிடும். இப்போது டோல் கட்டணம் 60 ரூபாய், ஆக 46 கிலோமீட்டருக்கு 240 ரூபாய், இதில் காருக்காக கட்டிய ரோட் டேக்ஸ் வராது.
கூட்டிவகுத்துப்பார்த்தால் ஒரேயொரு கிலோ மீட்டர் சாலையை கடக்க ஒரு காருக்கே ஐந்தே கால் ரூபாய்.. அப்படி என்றால் பேருந்துகள், கனரக லாரிகளுக்கு என்ன கதி என்று யோசித்து பாருங்கள்..
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாகனங்கள் என்றால்கூட ஒரு நாளைக்கு இரண்டு கோடியே நாற்பது லட்ச ரூபாய், வருடத்திற்கு 2,160 கோடி ரூபாய் என, வெறும் 46 கிலோ மீட்டர் சாலை, மத்திய மாநில அரசாங்கங்கள் மற்றும் சாலையை அமைத்து வசூல் செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சம்பாதித்து கொடுக்கிறது..
போகட்டும், பெட்ரோல் டீசல் விஷயத்தை விட்டுவிட்டு சுங்கக்கட்டணத்திற்கு மட்டும் வருவோம்.
கார், வேன், பஸ் லாரிகள் என 60 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ஒரு வழிக்கட்டணமாக வசூலிக்கிறார்கள். இவற்றிற்கு இடையிலான சராசரி 180 என வைத்துக்கொள்வோம். வேண்டாம்,100 என்றே வைத்துக்கொள்வோம். அதன்படி ஒரு நாளைக்கு மொத்த வசூல் ஒரு கோடி ரூபாய், 46 கிலோ மீட்டர் சாலையை அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆனது சில நூறு கோடிகள். ஆனால் சுங்க வசூலை பாருங்கள், தினம் ஒரு கோடிஎன வருடத்திற்கு 365 கோடி, இதில் இயக்கம் பராமரிப்பு செலவு 16 சதவீதம் என்று கழித்தாலும் வருடத்திற்கு 300 கோடி 15 ஆண்டுகளில் 4500 கோடி.. ரூபாய்..  நாம் சொல்வது பரணூர் என்ற சுங்கச்சாவடிக்கு மட்டும்.
ஆனால் அரசு தரப்பு புள்ளி விவரங்களை கேட்டால் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். . நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதின் ஒரு பகுதியை இங்கே நினைவு கூர்வோம்.
தாம்பரம் – திண்டிவனம் நான்குவழிச்சாலைப்பணி முடிந்து 2005-ஆம் ஆண்டு சுங்கக்கட்டணம் அறிமுகமானது. சாலை அமைக்க 536 கோடி செலவு என மத்திய அரசு தெரிவித்தது. 2018 ஆண்டு செப்டம்பர் வரை பதிமூன்றரை ஆண்டுகால சுங்க வசூல் 1098 கோடி. அதாவது இரண்டு சுங்கச்சாவடிகளையும் சேர்த்து.. ரொம்ப சிம்பிள் ஒரு சுங்கச்சாவடிக்கு சுமார் 600 கோடி. பதிமூன்றரை ஆண்டு சராசரி என்றால் ஆண்டுக்கு 44 கோடி.
ஒரு டோல்கேட்டில் தினமும் என கணக்கிட்டால் சுமார் 12 லட்சம். சாதாரண டாஸ்மாக் கடையிலேயே தின வசூல் சில லட்சம்…
9000 கோடிகளுக்கும் கணக்கில் வரும் வெறும் 1098 கோடிகளுக்கும் இடையில் மயிரிழையளவுதானே வித்தியாசம்?
சரி, எப்போதுமே ஆளும் கட்சிதான் இதைப்பற்றி கண்டுகொள்ளாது. ஆனால் ஆண்ட கட்சியும் மற்ற முக்கிய கட்சியும் ஏன் கண்டன அறிக்கையோடு மட்டுமே நிறுத்திக்கொள்கிறார்கள்? வழக்கு தொடுத்து, செய்த செலவுக்கு மேல் எடுத்த பிறகும் ஏன் டோல்கட்டணம், அதுவும் வருடத்திற்கு வருடம் உயர்த்தப்படும் கட்டணம் என்று, குடுமியை இழுக்க மாட்டேன் என்கிறார்கள்.?
டோல்கேட் அரசியல், அது பெரிய கூட்டு அரசியல். எல்லோரும் சேர்ந்த கும்மாள அரசியல்..பல்லாயிரம் கோடியை பங்கு போடும் பகுத் அச்சா அரசியல் என்று சொல்லப்படுவது சும்மாதானா?
(குறிப்பு. உண்மையான வசூல் விவரங்களை எவரும் வெளியிடமாட்டார்கள் என்பதால், நமக்கு தெரிந்தவர்களிடம் திரட்டிய புள்ளிவிவரங்கள் அடைப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனால் வசூல் விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். அவ்வளவுதான்)
அப்புறம் இன்னொரு சந்தோஷமான விஷயம். தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது