
புனே
சுங்கக் கட்டணம் வசூலிப்பு கைவிடப்பட மாட்டாது என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் புதிய சாலைகள் அமைப்பு மற்றும் அதன் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டு அதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்க அரசு அனுமதித்து இருந்தது. தற்போது அதற்கான காலக் கெடு முடிந்தும் இன்னமும் சுங்கக் கட்டண வசூலிப்பு தொடர்கிறது. இது குறித்து புனேவில் செய்தியாளர்கள் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு நிதின் கட்காரி, “தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப் படும் சுங்கக் கட்டணம் நீடிக்கக் கூடாது என கோரிக்கை வந்துள்ளது. சுங்கக் கட்டணத்தை கைவிட வேண்டும் என்பதில் நானும் உடன் படுகிறேன். அதே நேரத்தில் சாலைகளின் சரியான பராமரிப்புக்கும், வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் சாலைகள் தரமாக இருக்கவும் சுங்கக்கட்டணம் நிச்சயம் தேவைப் படுகிறது.
நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகம் எங்குமே தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சரியான கட்டணம் செலுத்தினால் மட்டுமே நல்ல சேவை கிடைக்கும். முன்பு மும்பையில் இருந்து புனே செல்ல 9 மணி நேரம் ஆனது. தற்போது இரண்டு மணி நேரத்தில் அதே தூரத்தில் பயணம் செய்ய முடிகிறது. ஆகவே தற்போதுள்ள சூழலில் சுங்கக் கட்டணத்தை கைவிட வாய்ப்பே இல்லாதததால் அதை தொடர வேண்டி உள்ளது.” என பதில் அளித்தார்.
[youtube-feed feed=1]