சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.
நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், அதை பராமரிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 1 முதல் பெரும்பாலான சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1 முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் 78 தேசிய சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் மேலும் உயர்த்தப்பட உள்ளது.
இந்த நிலையில், மார்ச் 31ந்தேதி முதல் தமிழ்நாட்டில் 40சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை புறநகர்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளும் அடங்கும். இதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி சுங்கச்சாவடி கட்டணம் குறைந்த பட்சம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.