டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார்.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 33 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி பரவசப்படுத்தினர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 120 ஆண்டுகளுக்கு பிறகு ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா, முதல் தங்கத்தை வென்ற புதிய சாதனைபடைத்தார். அதுபோல பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றிய பிரதமர்9 மோடி, ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், தேசத்தின் இதயங்களை வென்றது மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினரையும் ஊக்குவிப்பதாக பாராட்டினார். இதையடுத்து, இன்று ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரையும் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, இன்று பிரதமர் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி சகஜமுடன் கலந்துரையாடினார். பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளையும் அவர் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது, தாங்கள் வாங்கிய பதக்கங்களை பிரதமரிடம் காட்டி வீரர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். பிரதமரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதையடுத்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்து நாடு திரும்பிய இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேனீர் விருந்து கொடுத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.