டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை நடைபெற்ற ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது.
இந்தியாவும் மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஹாக்கி அணிக்கு கிரேட் பிரிட்டன் அணிக்கும் இடையே வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடினர். இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன. இந்திய பெண்கள் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் முயற்சிகளை தடுத்தார். முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர், ஆட்டம் மேலும் ஆக்ரோசமாக நடைபெற்றது.
இரண்டாவது கால் பகுதியில் பிரிட்டன் அணிக்கு முதல் கோல் வாய்ப்பாக சேம் சைட் கோல் ஆக கிடைத்தது. இந்திய வீராங்கனை செய்த தவறால் அவர்களுக்கு ஒரு கோல் கிடைத்தது. அடுத்ததாக தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினர் பிரிட்டன் வீராங்கனைகள். இதனால், பிரிட்டன் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து, இந்திய அணியின் வீராங்கனை குர்ஜித் கவுர் இரண்டு கோல்கள் அடித்தார். வந்தனா கட்டாரியா ஒரு கோல் அடித்தார். இரண்டாவது கால் பகுதியின் முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதையடுத்து, இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு 4 கோல்களுடன் முன்னிலை பெற்றது. இந்திய மகளிர் அணியினரும் கடுமையாக போராடி கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வெல்லாவிட்டாலும் கூட ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளது. மகளிர் அணியின் கடுமையான முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிப்போம்.