டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சிந்துவின் இந்த சாதனையைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கூறினர்.
இந்நிலையில், இந்திய பாட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் தனக்கு வாழ்த்துக் கூறியதாக செய்தியாளர்களிடம் சிந்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் சமயத்தில் தனது பயிற்சியாளரிடம் தெரிவிக்காமல் மூன்று மாதம் லண்டனில் புத்துணர்ச்சி பயிற்சி மேற்கொள்ளச் சென்ற சிந்துவுக்கும் அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோபிசந்த் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய சிந்து, கொரிய பயிற்சியாளரான பார்க் டேய் சங்-கிடம் பயிற்சி பெற்றார்.
டோக்கியோ செல்லும் இந்திய அணியுடன் தான் சொல்லப்போவதில்லை என்று கோபிசந்த் அறிவித்தபோது அதற்காக பி.வி. சிந்து வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
அதே வேளையில், தன்னுடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலால் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற முடியவில்லை.
இதுகுறித்து பி.வி. சிந்துவிடம் செய்தியாளர்கள் உங்களுக்கு கோபிசந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்களா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பி.வி. சிந்து, “பயிற்சியாளர் கோபிசந்த் எனக்கு வாழ்த்து கூறினார், ஆனால் சாய்னா நேவால் எனக்கு வாழ்த்து எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், ” சாய்னா நேவால் மூத்த வீரர் நாங்கள் அதிகமாக பேசிக்கொண்டது இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.