டோக்கியோ:
ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வழக்கமான நடைமுறைப்படி ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு (2020) ஜூலை 24-ம் தேதி ஜப்பான் தலைநகரம் டோக்கியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வருவதால், போட்டிகளில் கலந்துகொள்ள பல நாடுகள் தயக்கம் காட்டின. சில நாடுகள் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவது இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இதையடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்படுவதாக ஜப்பான் பிரதமர் அபே கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ல் தொடங்கப்பட இருப்பதாகவும், அதற்கான புதிய அட்டவணை இந்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.