டோக்கியோ
ஜப்பான் நாட்டில் இந்த வருடக் கோடையில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இன்றி நடக்க உள்ளது.
இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு ஜப்பானில் டோக்கியோ நகரில் நடைபெற இருந்தன. அவற்றுடன் ஊனமுற்றோருக்கான போட்டிகளான பாராலிம்பிக்ஸ் போட்டிகளும் நடைபெறுவதாக இருந்தன. கொரோனா பரவல் காரணமாக உலகெங்கும் பயணத்தடை விதிக்கப்பட்டதால் இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் இந்த போட்டிகள் ஜப்பானில் நடைபெறாது எனவும் தகவல்கள் வந்தன. அதையொட்டி வேறு சில நாடுகள் இந்த போட்டிகளை நடத்த முன் வந்தன. ஆயினும் ஜப்பான் இந்த போட்டிகளை இந்த வருடம் கோடையில் நடத்த முடிவு செய்தது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் செய்தி ஊடகமான கியோடோ ஏஜன்சி நிறுவனம், “இந்த வருடம் கோடைக் காலத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அவற்றை வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்றி நடத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
எனவே அரசு இனி வெளிநாட்டில் இருந்து வரும் விளையாட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுப்பதை நிறுத்தி உள்ளது. அரசால் இவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பது கடினம் என்பதும் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதுமே இதற்குக் காரணம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்” எனச் செய்தி வெளியிட்டுள்ளது.