டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். இன்று மாலை காணொளி காட்சி மூலம் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என அறவிக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் முதல் குழு வரும் 15ம் தேதி டோக்கியோ புறப்பட்டு செல்கிறது. முன்னதாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள செல்லும் அனைத்து குழுவினருடன் பிரதமர் மோடி ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 126 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது. 18 விதமான போட்டிகளில் மொத்தம் 68 பிரிவுகளில் இந்திய குழு பங்கேற்கிறது. இதற்கான இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விதங்களில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வீரர்களக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையிலும், வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று மாலை வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே மான்கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பிரதமர் வீரர்களின் எழுச்சியூட்டும் பயணங்கள் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.