டில்லி,
இன்று துணைஜனாதிபதிக்கான தேர்தல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதன் காரணமாக வெற்றி பெற்றவர் யார் என்ற விவரம் ஒருசில மணி நேரத்திலேயே தெரிய வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தற்போதைய துணை ஜனாதிபதி முகம்மது ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10ந்தேதி யுடன் முடிவடைய இருப்பதால், புதிய துணைஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
பாரதியஜனதா சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில், காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் மோடி முதலாவதாக தனது வாக்கை பதிவு செய்து, வாக்கு பதிவை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதைத் தொடர்ந்து உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதன் காரணமாக ஓரிரு மணி நேரத்துக்குள் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற விவரம் தெரிந்து விடும்.