இன்று உலக ஆண்கள் தினம்!
நவம்பர் 19-ம் நாள் அகில உலக ஆண்கள் தினமாக (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
பொதுவாக அனைத்து சிறப்பான நாட்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே இதுபோன்ற சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவானது.
imd_better_world
இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்கள்:
ஆண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு போன்றவற்றை வேண்டுவது,
ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது
அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை.
இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன!
இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது/
முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும்,
ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும்,
பல ஆணெதிர் சட்டங்களின் செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது போன்றவற்றிற்காகவுமே ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டியதிருக்கிறது.
ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளைக் களைய பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (All India Men’s Welfare Association) “AIMWA” என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நாடெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.