சென்னை
இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1374 உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் 3843 உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7621 உறுப்பினர்கள் என 12,838 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்குப் போட்டியிட 14 ஆயிரத்து 701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23 ஆயிரத்து 354 வேட்புமனுக்களும், பேரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36 ஆயிரத்து 361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் பணி நடந்தது. இன்று மதியம் 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பிப் பெறக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் ஒரு மாற்று வேட்பாளரை நிறுத்தி உள்ளது. முக்கிய வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக்கொண்டால் அந்த கட்சியின் மாற்று வேட்பாளரின் வேட்பு மனு தானாகவே ரத்து செய்யப்படும்.
இதையடுத்து இன்று மாலை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. வரும் 19 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.