சென்னை: சென்னையில் இன்று சூரிய வெளிச்சம் பிரகாசமாக  காணப்பட்டால், மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சூரிய வெளிச்சம் இல்லாவிட்டால், இன்று இரவு காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சுமார் 4மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது. நள்ளிரவு 11மணி அளவில் தொடங்கிய மழை இடி, மின்னலுடன் அதிகாலை 2. 30 மணி வரை பெய்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரவு பெய்த மழை  பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் நேரத்தில் மழை நின்றிருக்கும். சாலையில் இருந்த தண்ணீர் வடிந்தோடியிருக்கும். இதனால், குழந்தைகள் லீவு கிடைக்கும் என நினைத்திருப்பார்கள். ஆனால், அவர்களின் ஆசை குழி தோண்டி புதைச்சிருங்க.

எப்போதும் ஒரு பெரிய மழை பெய்தவுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பூமியை குளிர்ச்சி அடையச் செய்யும். ஆனால், இன்று பிரகாசமான சூரிய வெளிச்சம் இருந்தால் மழை பெய்ய அதிகம் வாய்ப்பிருக்கிறது.  சென்னையில் 90% மழைக்கு பிரகாசமான சூரியன் முக்கியம். இல்லையெனில், பகலில் ஓரளவு மந்தம் என்றால் இரவு நேரப் புயல்களைப் பார்ப்போம்.

அதுபோல் இந்த வாரத்தில் இன்னொரு நாளும் மழை பெய்யும். எனவே குடை, ரெய்ன் கோட்டுடன் போங்க என தெரிவித்துள்ளார்.