டில்லி

ன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. 

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சந்தேஷ்காளியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துத் தொடர் போராட்டங்கள் நடத்து வருகின்றன. இந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷிபு ஹஜிரா உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் டி.ஜி.பி. ராஜீவ் குமார் தெரிவித்தார்.

சந்தேஷ்காளி வன்முறை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அலாக் அலக் ஸ்ரீவஸ்தவா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். தனது மனுவில், சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கடமையை செய்யத் தவறிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். இன்று சந்தேஷ்காளி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு நீதிபதி பி.வி.நாகரத்னா, நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.