சென்னை
இன்று கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதை தமிழக கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்த கலந்தாய்வு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் நடத்தப்பட உள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இன்று காலை 10 மணிக்கு அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட இருக்கிறது.
இந்த தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணைய தளங்களில் சென்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு மட்டும் நேரடியாகவும், மற்றவர்களுக்கு இணையம் மூலமாகவும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது.
[youtube-feed feed=1]