சென்னை:

பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று தமிழகத்தில் 2வது கட்ட பிரசாரத்திற்காக வருகை தருகின்றனர்.

இதன காரணமாக அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று கேரளாவில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இன்று இரவு மதுரை வருகிறார். நாளை  காலை ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனியில் பிரசாரம் செய்கிறார். அதைத்தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம்,  சிவகங்கை வரை சென்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார்.

அதேவேளையில் இன்று மதியம் தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிற்பகல்  கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, மதுரைக்கு வரும் ராகுல், மாலை  தேனி என்று,  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் இரவு டில்லி திரும்புகிறார்.

இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் மதுரைக்கு வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.