சபரிமலை
இன்று காலை சபரிம்லையில் நிறை புத்தரிசி பூஜை நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை 5.40 மணிக்கு “நிறபுத்தரி பூஜா” என்று மலையாளத்தில் அழைக்கப்படும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.  நேற்று மாலை 5 மணிக்கு இதறகாக நடை திறக்கப்பட்டது.   நேற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில்  ஆகஸ்ட் முதல் வாரங்களில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.  திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான செட்டி குளங்கரை வயல்களில் விளைந்த நெற்பயிரை கதிருடன் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்திற்கு தலையில் சுமந்து வந்து,கோவில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்வதே நிறை புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது.
 
இவ்வாறு சன்னிதானத்தில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தப் பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்கிச் செல்வார்கள்.
 
இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை இன்று காலை 5.40 மணிக்கு நடைபெற்றுள்ளது.  கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் சபரிமலையில் நடை திறக்கப்படும் நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் மறுநாள் காலை முதல் அனுமதிக்கப்பட்டு வந்தது.  கடந்த மூன்று மாதங்களாக நடை திறக்கப்படும் போதே பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.
அதனால் நேற்று நடை திறக்கப்பட்டது முத்ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ஆன்லைன் மற்றும் நேரடி புக்கிங் செய்த அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கேரளாவில் தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பம்பை ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீலிமலை வழியாக நடந்து செல்வதற்கும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   இன்று மாலை கோவில் நடை அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.