டில்லி
பிரதமர் மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் டோஸ் ஊசி போட்டுக் கொண்டுள்ளார்.
நாடெங்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோய் உள்ளோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசரக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் ஆஸ்டிரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக இணை கண்டுபிடிப்பாகும். கோவாக்சின் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கண்டுபிடிப்பாகும்.
பிரதமர் மோடி கடந்த மார்ச் 1 ஆம் தேதி அன்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்து முதல் டோசை போட்டுக் கொண்டார். இன்று காலை அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இதையொட்டி பிரதமர் மோடி தமது டிவிட்டரில் “ கொரோனாவை வீழ்த்த நமக்கு இருக்கும் ஒரு சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்றாகும். தடுப்பூசி போடத் தகுதி உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.