திருச்செந்தூர்

இன்று ஒரே நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன.

தினந்தோறும்ம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இன்றைய தினம் சுபமுகூர்த்த நாள் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. மேலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்துவதற்கு அவர்களின் உறவினர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

எனவே கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாத மணமக்கள் சிலர், கோவிலின் முன்பகுதியிலும், பிரகாரம் உள்ளிட்ட இடங்களிலும் ஆங்காங்கே நின்றவாரு திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் பலர் திருமணம் முடிந்த கையோடு கடற்கரை அருகே மணமக்கள் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் டி.எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன