சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30- 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருபத்தூர், சேலம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .இதையடுத்து, இன்றும் நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
12ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்,
13ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், இன்று முதல் 13ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடதமிழகத்திலும் தென் தமிழகத்திலும் உள்ள கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
கடந்த இரு நாட்களில் விழுப்புரத்தில் அதிகபட்சமாக 180 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தமட்டில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.