டெல்லி: பிரதமர் மோடி பதவி ஏற்ற நாளான இன்றைய நாளை கருப்பு நாளாக கருதி, காசியாபாத் எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற மே 26-ந் தேதியை தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுபோல விவசாயிகளும் இன்றைய நாளை கறுப்பு நாளாக அறிவித்து உள்ளனர்.
மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 6 மாதமாக தொடர்கிறது.
இந்த போராட்டத்தின் 6 மாதம் நிறைவடைந்ததையொட்டி, நாடு முழுவதும் விவசாய பெருமக்கள் தங்கள் வீடுகள், கடைகள், டிராக்டர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்படி விவசாய சங்க தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி-அரியானா எல்லையான சிங்கு எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, விவசாயிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
போராட்டம் மற்றும் தர்ணா நடைபெறும் இடங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அரியானா முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.