விக்டர் ஹியூகோ நினைவு நாள்
“நான் பேனா பிடித்திருக்காவிட்டால் கத்தி பிடித்திருப்பேன்!”- என்று சொன்னவர், பிரெஞ்சு மகாகவியும், நாடக மேதையும், நாவலாசிரியருமான மனித நேயர் விக்டர் ஹியூகோ. (1802-1885).
“விக்டர் ஹியூகோ எழுத்துலகின் அற்புதம்… அவர் இலக்கியங்கள் எல்லாம் வாழ்வின் அனுபவ விளக்கமேயாகும். சென்ற நூற்றாண்டின் அதி மனிதர் (Superman) விக்டர் ஹியூகோ” என்று குறிப்பிடுகிறார், அவரது ‘ஏழைபடும்பாடு நாவலைத் தமிழுக்குத் தந்த யோகி சுத்தானந்த பாரதியார்.
1885 ஆம் ஆண்டு மே மாதம் 22ம் நாள் தனது 83ம் வயதில் மரணமுற்ற விக்டர் ஹியூகோ இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் மக்கள் பங்கு பெற்றனர் என்று வரலாறு சொல்கிறது.
விக்டர் ஹியூகோ வின் புரட்சிகர சிந்தனைகளில் சில:
• எழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் ;அவர்களின் வலிகளை,வாழ்க்கையை குறித்து பேச வேண்டும்.
• ஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான்.
• உன் பார்வைகளை புதுப்பித்துக்கொள், உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே !
• தனக்கான தருணம் வாய்க்கப்பெற்று விட்ட சிந்தனையை உலகின் அத்தனை சக்திகள் சேர்ந்தாலும் தடுக்க முடியாது
சர்வதேச பல்லுயிர் தினம்
பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. “பல்லுயிர் மற்றும் தண்ணீர்’ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. மனிதன், பல்லுயிர் மற்றும் இயற்கை என அனைத்துக்கும் தண்ணீர் அவசியம். பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, “பல்லுயிர் பரவல்’ எனப்படுகிறது
இந்தியாவில் இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றில் பலவகையான மருத்துவ குணமிக்க தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் காணப்படுகின்றன. நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில் ஏரளாமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. நாட்டில் பல வகையான காடுகளும் உள்ளன. இவற்றில் வாழும் பலவகையான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் வாழத் தகுதியாக இருக்கும்
லண்டன் நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பிக் பென் கடிகாரம் இயங்கத்துவங்கிய நாள் இன்று (1859 மே மாதம் 21ம் நாள். இக்கடிகாரத்தின் மணியோசை மத்திய லண்டன் முழுவதும் 2 கி.மீ. தூரம் வரைக்கும் கேட்கக் கூடியதாகும் . இக்கடிகாரம் அமைந்துள்ள கோபுரம் முதலில் ஸ்டீபன் கோபுரம் என்றே அழைக்கப்பட்டது. இங்கு நிறுவப்பெற்ற பெரிய மணியின் அடையாளமாக இந்தப் பெயர் பெற்றது. இன்றும் பிரிட்டனின் நாடாளுமன்றம் இரவில் நடந்தால் அதைக்குறிக்கும் விதமாகக் கோபுரத்தின் உச்சியில் விளக்கு எரியும். இரண்டாம் உலகப்போரின்போது இந்த கோபுரத்தின் மீது குண்டு வீசித்தகர்க்க ஜேர்மனிய படைகள் முயன்றும் அவற்றிலிருந்து தப்பியது