Leonardo-Da-Vinci-
லியொனார்டோ டா வின்சி நினைவு நாள்
டா வின்சியை ஓவியர் என்பதைவிட ஒரு அறிவியல் கலைஞர் என்று சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும் !
ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார். பிற்காலத்தில் தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.
அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார்.
பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்.
காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘மோனலிசா’ ஓவியம் இன்று மட்டுமின்றி  எக்காலத்திலும் லியானர்டோ டாவின்சியின் புகழை பறைசாற்றிக்கொண்டே யிருக்கும்
Disney
மிக்கி மவுஸ் “பிறந்ததினம்”
1928.ம் ஆண்டு இதே தினத்தில்தான் அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி தனது பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் (Mikki Mouse)  படத்தினை வரைந்தார்.
தலைமுறைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளைக் குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம் இது. மொழிகளைக் கடந்து பல கோடி ரசிகர்களைக் கொண்ட வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் உருவானது ஒரு சுவராஸ்யமான கதையாகும் !
டிஸ்னி பணிபுரிந்த அலுவலக மேசைக்கு அடிக்கடி ஒரு எலி வந்து போகும். அதனுடைய சேட்டைகளினால் கவரப்பட்ட டிஸ்னி அதனைப் பார்த்து வரைந்த ஓவியமே மிக்கி மவுஸ் ஆகும். முதலில் இந்த எலிக்கு மார்டைமர் மவுஸ் என்றுதான் டிஸ்னி பெயரிட்டார். ஆனால், அவரது மனைவி இந்தப் பெயரை மாற்றச் சொன்னதால் மிக்கி மவுஸ் என்று மாற்றினார்.
Osama
 
ஒசாமா கொல்லப்பட்ட தினம்
மே 2 (அமெரிக்க நேரப்படி மே 1) 2011 – உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின் லேடன் அமெரிக்க கமாண்டோ படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகில் இருந்த ஆபோட்டாபாத் நகரில் பாகிஸ்தானின் காகுல் ராணுவ பயிற்சி மையம் இருக்கிறது. இங்கிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் இருந்த 3 மாடிக் கட்டடத்தில்தான் ஒசாமா பல ஆண்டுகளாக பதுங்கியிருந்தான்.. இந்தக் கட்டடத்தை சில மாதங்களாகவே அமெரிக்க உளவுத்துறையினர் கண்காணித்து வந்திருக்கின்றனர்.  ஒசாமா பதுங்கியிருப்பது உறுதியானதும்  அதிகாலை நேரத்தில் அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் 4 ஹெலிகாப்டர்கள் மூலமாக அந்த மாளிகையை முற்றுகையிட்டனர்.
கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்த ஒசாமாவின் அரேபிய பாதுகாவலர்கள் உடனடியாகச் சுதாரித்து ஹெலிகாப்டர்களை  நோக்கித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அமெரிக்க கமாண்டோக்கள் வேகமாக முன்னேறி கட்டடத்துக்குள் நுழைந்து அங்கிருந்த ஒசாமா பின் லேடனை நோக்கி சரமாரியாகச் சுட்டதாகவும், இதில் அவனது முகத்திலும் தலையிலும் குண்டுகள் பாய்ந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவன்  இறந்தது அமெரிக்க அதிகாரிகளால் உடனடியாக உறுதிசெய்யப்பட்டது.
அவனது உடலை நிலத்தில் அடக்கம் செய்தால் அதை நினைவிடமாக்கி விடுவார்கள் என்பதால், கடலில் போட்டு விட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் எந்தக் கடலில் அவர் உடல் போடப்பட்டது என்று அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.