இன்று மகா சிவராத்திரி. இந்துக்கள் சிவபெருமானுக்காக விரதம் இருந்து அனுஷ்டிக்கும் மகத்தான நாள்.
‘ஓம் நமசிவாய’ சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் வாழ்வில் உச்சம்பெறலாம்.
அம்பாளின் வழிபாட்டுக்கு உகந்தவை நவராத்திரிகள் என்றால், அரனாருக்கு உகந்தது ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. மகிமைகள் பல கொண்டது சிவராத்திரி. `சிவம் என்றால் மங்களம் என்று பொருள். ஆக, சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி’ என்பார்கள் பெரியோர்கள்.
வருடம்தோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும்.
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதிநாளுக்குக் கூடுதல் மகத்துவம் உண்டு. அந்தத் திருநாளையே நாம் மகா சிவராத்திரி புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறோம்.
இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரலய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றன.
சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என கருதப்படுகின்றது.
இப்படி 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடையலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு, இன்று ஆலயங்களில் யாம பூஜைகளும், விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.
ஓம் நமச்சிவாய…. சிவாய நம…
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி