இன்று வைகாசி விசாகம்… ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளாக பக்தர்களால் போற்றப்படும், திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முருகனை இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடும் குழந்தையில்லா தம்பதிகளுக்கு நன்மக்கட்பேறு உண்டாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் சீராகும்.
வைகாசி விசாக தினத்தில் தானங்கள் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த புண்ணிய தினத்தில் தினத்தில் முருகனை வழிபட்டு மோர், பானகம், இளநீர், தயிர்சாதம் போன்றவற்றை பக்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு தானம் செய்தால் ஒருவரின் குலம் எல்லாச் செல்வங்களையும் பெற்று தழைத்தோங்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்த இனிய நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தீராத பகை விலகும்.உறவினர்கள், நண்பர்களிடையே ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
நமது நாட்டின் ஆன்மீகம் மற்றும் இறைவழிபாடு முறைகளில் ஜோதிட கலையும் இணைந்து செயல்படுகிறது. சில குறிப்பிட்ட நட்சத்திர தினங்களில் பூமியில் பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் அதிகம் குவிவதால் அந்த தினம் வழிபாட்டிற்குரிய தினமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.
“மார்கழி திருவாதிரை, மாசி மகம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை” வரிசையில் வைகாசி விசாகம் தினம் தெய்வ வழிபாட்டிற்கு உரிய ஒரு நாளாக கடைபிடிக்கபடுகிறது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமான் வழிபாட்டு தினமாக இந்நாள் இருக்கிறது.
புராணங்களின் படி விசாகன் எனப்படும் அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் செய்ததால் இது விசாக மாசம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் வைகாசி மாதம் என மாறியதாக ஒரு தகவல் கூறப்படுகிறது . மேலும் 27 நட்சத்திரங்களில் 16 வது நட்சத்திரமாக இந்த விசாகம் நட்சத்திரம் வருகிறது. விசாக நட்சத்திரத்திற்குரிய அதிபதி குரு பகவான் ஆவார். எனவே வைகாசி விசாக நட்சத்திர தினத்தன்று முருகனை வழிபடுபவர்கள் முருகப் பெருமான் மற்றும் குருபகவான் ஆகிய இருவரின் அருளையும் சேர்த்து பெறுபவர்கள் ஆகின்றனர்.
வைகாசி விசாகத்தன்று முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. அற்புதமான வைகாசி விசாக தினத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்குச் சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய காரியம் சீக்கிரம் நிறைவேறு வதோடு, இன்ன பிற நல்ல பலன்களும் கிடைக்கும்.
இல்லத்தில் சுப காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும். உங்கள் வேலைகளில் வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் ஏற்படும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.
வைகாசி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு…
அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
இன்றைய தினம் முருகனை தரிசித்துஅவனுடைய அருளை பெறுவோமாக….