சென்னை: இன்று வைகாசி விசாகfத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  பல இடங்களில் கோவில் உழவார பணிகள் நடைபெற்று வருவதால் , பல பகுதிகள் தடுப்பு அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இன்று வைகாசி விசாகம் நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில்  வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டு வருகிறது. வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா நாளை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். முருகன் பிறந்த விசாக நட்சத்திரத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.  இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனைகள் நடைபெற்றது.

இன்று மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாரதனை நடைபெறஉள்ளது.அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.

வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு  அடையாள பட்டை அணிவிக்கப்பட்டு அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும், அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதனால், திருசெந்தூரில் திருவிழா களைகட்டியுள்ளது.

கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, உழவார பணிகள்  மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால்,  பல இடங்களில்  வழக்கமான பாதைகள் மாற்றப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால்,. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அதிக தூரம் நடந்துவந்து கோவில் வாசலை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயதான பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இருந்தாலும்,  வாகனங்கள் தூரத்திலேயே நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கோவிலுக்கு வர கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைகாசி விசாகத்தன்று முருகன் என்ற அழகனை ஆசையோடு தரிசிக்க வந்த பக்தர்கள்,  கூட்டம் மற்றும், கோவிலின் பல பகுதிகளில் நடைபெற்று பணிகள், காரணமாக, பழைய பாரம்பரியமிக்க திருச்செந்தூரை காணவில்லை, அனைத்தும் புதிதாக இருப்பதாகவும், கோவில் மண்டபத்தின் வழியாக சுவாமி தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்ததையும் பதிவு செய்துள்ளனர்.