சென்னை: சென்னை மாநகராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்றும் செலுத்த தவறும் பட்சத்தில் தனி வட்டி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் இன்று செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி, மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றிற்கு செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்துவரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வந்தது. கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப ஒரு சதுர அடிக்குரிய குறைந்த மற்றும் அதிகபட்ச அடிப்படை வரியை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது.
சொந்தமாக வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் போன்றவற்றை வைத்துள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சொத்துவரி செலுத்த வேண்டியது கட்டாயம். அப்படி சொத்து வரிகட்ட தவறும் பட்சத்தில் சொத்து வரியுடன் சேர்த்து தனி வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், 2022ல் ஒட்டு மொத்தமாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீடுகளின் பரப்பளவு அடிப்படையில், 25 முதல் 100 சதவீதம் வரை, சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பின், 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியதன் அடிப்படையில், பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிகள், கடந்த ஆண்டில் சொத்து வரியை 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தின.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்குரிய சொத்துவரியை சொத்து உரிமையாளர்கள் 30-ந் தேதிக்குள் செலுத்திடவேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேலும், சென்னை மாநகராட்சி வரி செலுத்துபவர்கள், அரசு இ-சேவை மையம், இணையதளம், நம்ம சென்னை செயலி, கிரெடிட், டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. சேவை, பே.டி.எம்., நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்., மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை எந்திரம், கியூ-ஆர் குறியீடு மற்றும் 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியினை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகர வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படிகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.