நாகர்கோவில்: இன்று திட்டமிட்டபடி வேல்யாத்திரை திருச்செந்தூரில் நிறைவுபெறும். இதையொட்டி, தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக மக்களியை ஆதரவை பெறும் நோக்கில் பாரதியஜனதா கட்சி வேல்யாத்திரையை அறிவித்தது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒருமாத காலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நடைபெற இருந்த இந்த வேல்யாத்திரைக்கு இதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலும், தமிழகஅரசும், நீதிமன்றமும் தடை விதித்தது. ஆனால், தடையை மீறி அவ்வப்போது வேல்யாத்திரை நடைபெற்று வருகிறது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் முருகன் உட்பட நிர்வாகிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வேல்யாத்திரையின் இறுதி நாளான இன்று தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் முருகன் அறிவித்த்துள்ளார். நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முருகன். எத்தனை தடைகள் வந்தாலும் திருச்செந்தூரில் இன்று வேல் யாத்திரை நிறைவு விழா நடந்தே தீரும் என்றார். ரஜினிகாந்த் தேசப்பற்றாளர். சிறந்த ஆன்மிகவாதி. அவர் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறோம். அவர் கட்சி தொடங்கிய பின், தேசிய தலைமை ஆலோசனையின் படி எங்களது செயல்பாடு அமையும் என்றார்.
முன்னதாக குமரி பா.ஜ. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் தமிழக மேலிட பார்வையாளர் ரவி, மாநில தலைவர் முருகன் ஆகியோர் பங்கேற்று வருகிற சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து பேசினர். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டனர்.