டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா உள்பட சில வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்தியஅரசு பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இன்று 50வது நாளாக தொடர்ந்து வருகிறது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட சிறப்பு குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், வேளாண் சட்டங்கள் முழுமையாக மத்திய அரசால் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.