சென்னை: அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.  சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று  விழா நடைபெறுகிறது

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய்,  2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை தனது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது உதவிகளை செய்து வரும் அவரது ரசிகர் மன்றம், கடந்த ஆண்டு (2023) முதன்முறையாக   10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தியது.இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அத்துடன் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து,   நடப்பு  ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில்,  மாநிலத்தில் உள்ள  234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்பாடுகளை கட்சி  நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.   இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மாணவர்களை விஜய் 2 கட்டங்களாக சந்தித்து பரிசு வழங்க உள்ளார்.

இன்று முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

2வது கட்ட கல்வி விருது விழா

2-வது கட்டமாக, ஜூலை 3-ம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அப்போது, மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி விஜய் கவுரவிக்க உள்ளார்.

இந்த விழாவில், விஜய், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கல்வி விருது வழங்கும் விழாவில் மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு சாதம், வடை, அப்பளம், அவியல், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி, துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரக்கறி, ஆனியன் மணிலா, வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம் ஆகியவை வழங்கப்படுகிறது.