சென்னை: பெரியார் பிறந்தநாளை தமிழகஅரசு சமூக நீதி நாளாக கொண்டாட உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கடந்த 6-ம் தேதியன்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறித்தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்ததினமான செப்டம்பர் 17-ம் தேதி அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் ”சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் விதமாக பின்வரும் உறுதிமொழியை அனுசரிக்க முடிவுசெய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி பின்வருமாறு உறுதிமொழி வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளன;
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் – யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பன்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன் ! சுயமரியாதை ஆளுமைத் திறனும் -பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்..! சமத்துவம் , சகோதரத்துவம், சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்..! மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்..! சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்..!”
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.