சென்னை
இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 5 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இன்று மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் ஆன கருணாநிதியின் 97 ஆம் பிறந்த நாள் தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூட்டம் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதையொட்டி வீட்டிலேயே கருணாநிதி பிறந்த நாளை கொண்டாட முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதையொட்டி தமிழகத்தில் 5 நலத்திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த 5 திட்டங்களையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ளார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதில் முதல் தவணையான ரூ. 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு இன்று இரண்டாம் தவணை ரூ.2000 வழங்கப்படுகிறது. இன்று தொடக்கப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
திட்டங்கள் விவரங்கள் வருமாறு
* கொரோனா நோய்த்தொற்று நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2வது தவணையாக 2 ஆயிரம் வழங்குதல்.
* கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்குதல்
* தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்குதல்.
* கொரோனா நோய்த் தொற்றால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை வழங்குதல்
ஆகியவை ஆகும்.