சென்னை
இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை ஒட்டி தமிழகத்தின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி தமிழக தலைவர்கள் வாழ்த்துச் செய்திகள் அனுப்பி உள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச் செய்தியில், ”பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துன்பங்களைக் கண்டு அஞ்சக்கூடாது. அவற்றை தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும். அந்த துன்பங்களை வெற்றிப்படிகளாக்கி மேலும் முன்னேற வேண்டும்” என கூறி உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின், ”மகளிர் தின வாழ்த்துக்கள் கூறும் அதே வேளையில் மகளிர் முன்னேற்றம் மற்றும் மகளிர் பாதுகாப்பு என்பது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பெண்கள் மீதான வன்முறையை தடுக்கவும் விழிப்புணர்வை உண்டாக்கவும் இலவச ஹெல்ப் லைன் தொலைபேசி சேவையை உருவாக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்க்கரசர், “மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சோனியா மற்றும் ராகுல் காந்தியின் முயற்சியால் நிறைவேற்றப் பட்ட மசோதா பாஜகவினால் கவனிக்கப்படாமல் உள்ளது. வெறும் கனவாகவே உள்ள இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையாக நிறைவேறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க அனைவரும் இந்த தினத்தில் உறுதி பூணுவோம்” எனக் கூறி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று மகளிர் தினக் கூட்டம் ராயப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகள் வேண்டாம் என இக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.