ரேடியோவும் நம்மை கவிழ்த்த பிஞ்சு தோழியும்..
நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு….
ரேடியோ உலகம் என்பது தனி சுகம். அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்..
ரேடியோ வைத்திருப்பதும் ஒரு பணக்கார வர்க்கத்தின் அடையாளமாக இருந்தது. ரேடியாவுக்கு தபால் ஆபிசில் பணம்கட்டி லைசன்ஸ் வைத்திருக்கவேண்டிய காலம் இருந்தது.
திடீரென அதிகாரிகள், ரெய்டுக்கு வருவார்கள். லைசன்ஸ் இல்லாதவர்கள், அரிசி பானைகள் போன்றவற்றில் ரேடியோவை தூக்கிபோட்டு ஒளித்துவிடுவார்கள்..
எங்கள் குடும்பம் விஜிபியிடம் ஒரு மர்பி ரேடியாவை தவணை முறையில் வாங்குவதற்குள் படாதபாடுபட்டது இன்றைக்கும் நினைவிருக்கிறது
70களில்,அந்த ரேடியோவைத்து என் அக்காவிடமும் நெருங்கிய பிஞ்சு டோலிகளிடமும் நான் செய்து வந்த ஒரு பிராடுத்தனமும் மறக்க முடியாத ஒன்று..
காலை சரியாக ஏழேகால் மணிக்கு என்று நினைவு.. அன்றைய நிகழ்ச்சிகள் பற்றி முன்னோட்டம் சொல்வார்கள். அதில்,காலை எட்டே கால் விவிதபாரதி உங்கள் விருப்பம் உட்பட அன்று சினிமா பாடல்கள் இடம் பெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கொட்டுவார்கள்.
அதில், இன்னன்ன நிகழ்ச்சியில் இடம் பெறப்போகும் பாடல்களின் திரைப்படங்களை வரிசையாக சொல்வார்கள். ரேடியோ இருக்கிற வீட்டுக்கு போய் இதை ரகசியமாக கேட்டு, ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு,, நிகழ்ச்சியின் போது நாம சொல்லித்தான் ரேடியாகாரனே குறிப்பிட்ட படத்திலிருந்து பாடலை போடறாமாதிரி எல்லார் மத்தியிலும் சீன் போடுவோம்.
இதில் நமக்கு மிகமிகப்பிடித்த பிஞ்சு டோலி, நம்மள விட செம பிரிலியண்ட்.. படம் பேர்களை சொல்ற உன்னால, படத்துல இருந்து எந்த பாட்டுன்னு சொல்லமுடியுமான்னு கேட்டு காலை வாரும்,
டாக்டர் சிவான்னு நாம சொல்லிட்டு, மலரே குறிஞ்சி மலரே பாட்டுதான் என்போம்.. அன்னைக்கு பார்த்து எடுபட்ட விவிதபாரதிகாரன், நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே…ன்னு கவிழ்த்து நம்ம மொகத்துல சாணிய அடிச்சிடுவான்..
டேய் பிராடு, நீ ரகசியமா கேக்கிற முன்னோட்டத்தை நாங்களும் கண்டுபிடிச்சிடோம்னு சொல்லி கதம் கதம் பாடிடிச்சி டோலி. (ச்சே எவ்ளோ அழகான காலம் அது)
காலை மதியம் இரவு மட்டுமே ஒலிக்கும் சினிமா பாடல்கள், ரிலீஸ் ஆன புது படங்கள் அப்படியே முழுப்படமாய் கண்முன் நிறுத்தும் ஐந்து பத்து நிமிட எல்லார் சாமி சினிமா விளம்பர டிரெய்லர்கள். ஞாயிறு மதியம் ஒரு மணிநேர ஒலிச்சித்திரம்….
”..நேயர்களே. திரைகானம் கேட்டீர்கள். தொடர்வது கர்நாடக சங்கீதம்…ராகம் காம்போதி.. பாடுபவர்…..”
இப்படி ரேடியா சொல்ல, உடனே பெரும்பாலானோர் வீட்டில் ஒலிக்கும் குரல்,, ஏய் அந்த ரேடியோவை நிறுத்து..
இன்று சர்வதேச ரேடியோ தினம்…