இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியது.
இந்தியா தனக்கான அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் 296 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தார்கள். முதலில் அமைக்கப்பட்ட 7 பேர் குழுவில் அம்பேத்கர் இடம்பெறவில்லை. குழுவில் இடம்பெற்றிருந்த கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர், குழுவிலிருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக டாக்டர் அம்பேத்கர் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அம்பேத்கர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு அரசியலமைப்புச் சட்ட வரைவை உருவாக்கியது. அந்தக் குழுவில் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த குழுவினர் சுமார் 166 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியும், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சாசன சட்டத்தில் உள்ள பிரிவுகளை கொண்டும் இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கினர். .இவர்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கையால் எழுதப்பட்ட இரண்டு பிரதிகளில் கையொப்பமிட்டனர்.
இது முழுமை பெற்று, இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நாட்டின் அரசியல் சட்டத்தை, இந்திய அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது. இந்தச் சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்ததால் அந்த நாளை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு என்று பெருமையைக் கொண்டது. இதன் அடிப்படையில்தான் இந்தியா பொதுவுடமை மற்றும மதச்சார்பின்மை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் அரசியல் சட்டத்தை நிர்ணயம் செய்த அண்ணல் அம்பேத்காரை கவுரவிக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
மேலும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களும், முன்னாள் பிரதமர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்காது என்றும் கூறப்படுகிறது.