சென்னை: இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்களிடையே பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆர்எஸ்எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச்செய்தி கூறியிருப்பதாவது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார். புதிய தொடக்கங்களுக்கும், தடைகளை நீக்குவதற்கும் நாம் அவருடைய ஆசீர்வாதங்களை பெறுகிறோம். நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து, இந்த பண்டிகையை கொண்டாடுவோம். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி:
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த புனிதமான தருணத்தில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும். கணேஷ பகவான் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன். கணபதி பப்பா மோரியா!” எனப் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): பிரணவ பொருளாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வு கிடைக்கப்பெற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): அனைவர் வாழ்விலும் துன்பம் நீங்கி இன்பம் பொங்கட்டும். சங்கடம் நீங்கி சந்தோஷம் பெருகட்டும். மாற்றத்தின் மூலம் ஏற்றம் உண்டாகட்டும்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள க்ஸ் தள பதிவில், வினைகளைத் தீர்த்து வெற்றிகளை வழங்கிடும் மங்கள நாயகன். கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அருள் பாலிக்கும் அருகம்புல் பிரியன். அனைத்திற்கும் முதலான தெய்வமாக வணங்கப்படும் கணபதியைச் சிறப்போடு கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்விலும் செல்வம், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கிட விநாயகப் பெருமானை மனதார வேண்டுகிறேன்.என தெரிவித்துள்ளார் .
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தீயவை அழிய, வினை களைய வாழ்வில் முன்னேற நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டுகிறேன்.
கன்னியாகுமாரி எம்.பி. விஜய்வசந்த் : விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரன் நமது வினைகளை போக்கி நல்ல தொடக்கங்களுக்கு அருள் புரிவாராக. அறிவும், அறிவுறுத்தலும், வெற்றியும் அருள்புரியும் விநாயகப் பெருமான், நம்மை எல்லாம் நல்லெண்ணப் பாதையில் நடத்தும் வழிகாட்டியாக விளங்குவாராக.
இந்த புண்ணிய நாளில், அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். எந்த இடரையும் அகற்றி, மனங்களில் மகிழ்ச்சியை வளர்த்து, சமூகத்தில் ஒற்றுமை, அன்பு, சமாதானம் நிலைத்திருக்க விநாயகர் பெருமான் அருள் புரியட்டும். எல்லோரும் இணைந்து வாழும் நல்ல சமூகமே நமது பலம். இந்த நாளில் நாமும் ஒற்றுமையோடு முன்னேறுவோம். விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.