திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
நீதிக்கட்சி மீதான ஆர்வம் காரணமாக தனது 13-வது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 14 வது வயதில் தன்னை நீதிக்கட்சிலு இணைத்துக்கொண்டார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் அதை உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார்.
1957-ல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, மத்தியஅரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர். மொழிப்போராட்டம் காரணமாக பலமுறை சென்றதுடன், மிசா சட்டத்தால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதும் தமிழக வரலாற்றில் நடைபெற்ற மறக்க முடியாத வடுக்கலாக தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதி காத்த சமத்துவச் செம்மல், மக்கள் நல திட்டங்கள் பல தந்த தமிழினத் தலைவர், தமிழருக்காகவும் தமிழகத்திற்காகவும் தன் வாழ்நாளை செலவழித்தவர். அவர் ஓர் ஆற்றல் மிகுந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், தத்துவஞானி, கொடை அளிப்பவர், நாடகக் கலைஞர் மற்றும் நடிகராகவும் இருந்தவர்.
80 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அனைத்துத் துறைகளிலும் ஈடுஇணையற்ற சாதனையாளர். அவர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சாதனைகள் படைத்தவர். சமூகப் போராளியான அவர் தம் இறுதி நாட்கள் வரை சமூகநீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றுக்காகப் போராடியவர்.
ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தவர். அவர் இயற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்கள் என்றும் அவரை நினைவு கூர்பவை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு, விதவைகள் மறு வாழ்வு, குடிசை மாற்று வாரியம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பலருக்கான வாரியங்கள் போன்ற புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மேற்கொண்டார்.
சமூகத்தில் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டுவந்த திருநங்கைகளை மதிப்புமிக்க புதிய பெயருடன் அழைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கும் அதைச் செய்தார்.
ஐம்பது வருட காலங்கள் எந்தத் தடையும் இன்றி ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்தார். அவரது நீண்ட சாதனைப் பட்டியல் அவரது கிரீடத்தில் வைரங்களாக மிளிர்கின்றன.
கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியிலும் இருந்திருக்கிறார், எதிர்க்கட்சியிலும் இருந்திருக் கிறார். 1977-லிருந்து 1989 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்துள்ளார்.
1989-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 1991-ல், இரண்டாண்டுகளில் ஆட்சியை இழந்தது. இந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர்த்து, 1977- லிருந்து 1996 ஆம் ஆண்டு வரை, கலைஞர் அவர்கள் தலைமை வகித்த திராவிட முன் னேற்றக் கழகம் ஏறத்தாழ எதிர்க்கட்சிதான். ஆளும் கட்சியாக, முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகளுக்கு ஈடாக, எதிர்க்கட்சியாக, எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் வெளிப்படும். இருபது ஆண்டுகள் எதிர்க்கட்சியில் ஒருவர் தலைவராக இருந்து அந்தக் கட்சியை முழுமையாகக் காப்பாற்றியவர் இந்தியாவில் யாரும் இல்லை. அந்தத் தலைமைக் குணம் என்பது சிலருக்கு வரப்பிரசாதமாக வருகிறது,
பதினெட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் கட்சியின் தலைவராக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தவித இடையூறு, சலசலப்புமின்றி காப்பாற்றி சாதனை படைத்தவர் கருணாநிதி.
இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், வங்கக்கரையோரம், ”ஓய்வில்லாமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகத்தினூடே இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்… தமிழக மக்கள் மட்டுமின்றி உலக தமிழர்களையும் , கழக உடன்பிறப்புகளையும், மு.க.ஸ்டாலின் எனும் தலைவன் வழிநடத்துவார் எனும் நம்பிக்கையோடு.
அவரது நம்பிக்கை இன்று ஈடேறி உள்ளது. இன்று கலைஞர் இல்லாவிட்டாலும் அவரது வழியில், அவரது மகன் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் தலைவராக, முதல்வராக அமர்ந்து, மக்கள் பணியினை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.
இன்று கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்.